தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் - மாநிலங்களவையில் எம்.பி. தம்பிதுரை கோரிக்கை
|தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று (18-ந்தேதி) முதல் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று தொடங்கிய சிறப்புக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து விவாதிக்கப்பட்டது. 75 ஆண்டு கால நாடாளுமன்றத்தின் சாதனைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அதிமுக எம்பி தம்பிதுரை, தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அவர் திராவிட இயக்கத்தின் நிறுவனரான பேரறிஞர் அண்ணா ஒற்றை உறுப்பினராக மாநிலங்களவைக்கு வந்ததாக தெரிவித்தார். மொழிகள் விவகாரத்தில் அண்ணா கூட்டாட்சி தத்துவத்திற்காக மாநிலங்களவையில் போராடியதாக தெரிவித்த அவர், தமிழ் மொழியை நாட்டின் அலுவல் மொழியாக்க அண்ணா பாடுபட்டதாக குறிப்பிட்டார்.
1967-ம் ஆண்டு முதல் தமிழகத்தை திராவிட இயக்கங்களே ஆட்சி செய்து வருவதாகவும் தேசிய கட்சிகள் தமிழகத்தில் நுழைய முடியாத சூழல் நிலவி வருவதாகவும் குறிப்பிட்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் தேசிய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.