பா.ஜனதாவின் வெற்றியில் தமிழகத்தின் பங்கு பெரியதாக இருக்கும் - அனுராக்சிங் தாக்குர்
|தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது என்று மந்திரி அனுராக்சிங் தாக்குர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்குர் டெல்லியில் 'தினத்தந்தி' உள்பட பிராந்திய மொழி பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டை கடந்த தேர்தலை வைத்து ஏன் பார்க்கிறீர்கள்? இந்த தேர்தலை பாருங்கள். பா.ஜனதாவுக்கு தமிழ்நாட்டில் மிகுந்த எழுச்சி தெரிகிறது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்தார். காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமங்கள் நடத்தினார். பேசிய இடங்களில் எல்லாம் திருவள்ளுவரின் திருக்குறளை கோடிட்டு காட்டினார். தமிழிலும் பேசுகிறார். ராமர்கோவில் சிலை பிரதிஷ்டை விழாவின்போதும், அதன்பிறகும் பலமுறை தமிழ்நாடு சென்றிருக்கிறார். தமிழ்நாடு மீது அவர் மிகுந்த கவனம் செலுத்துகிறார்.
இந்த காரணங்களால் பா.ஜனதா அங்கு வெற்றி பெறும். தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. அதிக இடங்கள் கிடைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரட்டை இலக்கத்தில் இடங்கள் கிடைக்கும்.
கேரளாவில்கூட ஓட்டு சதவீதம் எங்களுக்கு உயர்ந்து இருக்கிறது. மக்கள் அங்கு அமைதியான அரசியலை விரும்புகிறார்கள். மத்தியில் நல்ல ஆட்சியால் பா.ஜனதா அங்கு வளர்ந்துள்ளது. எனவே இந்த முறை பெரிய மாற்றம் அங்கு வரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 2019-ல் 303 இடங்கள் தந்தனர். 2024-ல் 405 இடங்களைத் தருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பா.ஜனதாவுக்கு பாதகமாக இருக்கிறதே? என்று கேட்டதற்கு, ஜூன் 4-ந் தேதி வரை காத்திருங்கள். பா.ஜனதா 400 இடங்களுக்கு மேல் வெல்லும். அதில் தமிழகத்தின் பங்கு பெரியதாக இருக்கும் என்று கூறினார்.