பெங்களூரு ரெயில் நிலையத்தில் ரூ.112 கோடி போதைப்பொருள் பறிமுதல் - தமிழக வாலிபர் கைது
|பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஹெராயின் கடத்தி செல்லப்படுவதாக வருவாய் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று டெல்லி செல்ல இருந்த ரெயிலில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது வாலிபர் ஒருவரின் டிராலி பேக்கில் 16 கிலோ அளவுக்கு ஹெராயின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.112 கோடி ஆகும்.
இதையடுத்து அதிகாரிகள் அந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதும், எத்தியோபியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு ஹெராயினை கடத்தி வந்ததும், அதனை பெங்களூருவில் இருந்து டெல்லிக்கு ரெயில் மூலம் கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. கைதான வாலிபரின் பெயர், மற்ற விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர்.