'மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது' - திருச்சி சிவா எம்.பி.
|மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
2024-25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாகுபாடு இன்றி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"மத்திய பட்ஜெட்டில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கும் குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் பாகுபாடு இன்றி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழ்நாடு ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டிற்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இந்த பட்ஜெட் முற்றிலும் அரசியல் ரீதியில் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.