தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் தம்பிதுரை வலியுறுத்தல்
|தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தம்பிதுரை வலியுறுத்தினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பழங்குடியினர் சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக நீதிக்கு இடஒதுக்கீடு அவசியமானது. நாட்டில் முதல்முறையாக தமிழ்நாட்டில் தான் இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு எப்படியும் இருக்கலாம். ஆனால் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு நாடு முழுவதும் ஒரே போல இருக்க வேண்டும். ஆனால் சமமற்ற நிலையில் இருக்கிறது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கர்நாடக மாநிலத்தில் வால்மீகி மற்றும் குருவா போன்ற சமுதாயத்தினர் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். ஆனால் கர்நாடகாவில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூர இடைவெளியில் தமிழ்நாட்டில் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர்களாக உள்ளனர். எனவே தமிழ்நாட்டில் உள்ள வால்மீகி, போயர், குருவா மற்றும் படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதைப்போல மீனவ சமுதாய மக்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
பழங்குடியின மக்களுக்காக தமிழ்நாட்டில் 2 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆனால் ஒரு மக்களவைத் தொகுதி கூட இல்லை. எனவே தொகுதி மறுவரையின் போது தமிழ்நாட்டில் பழங்குடியினருக்கும் ஒரு தொகுதி உருவாக்க வேண்டும். பெரும்பான்மையாக உள்ள மீனவர்கள் அதில் போட்டியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.