தமிழ் புத்தக திருவிழாவில் 4-ம் நாள் நிகழ்ச்சி கோலாகலம்
|கல்வி பயின்றால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் கூறியுள்ளார்.
பெங்களூரு:
கல்வி பயின்றால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் கூறியுள்ளார்.
கருத்தரங்குகள்
கர்நாடக தமிழ் பத்திரிகையாளர்கள் சங்கம், கர்நாடக தமிழ் பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் ஆகியவை சார்பில் தமிழ் புத்தக திருவிழா தொடக்க விழா கடந்த 19-ந் தேதி பெங்களூருவில் உள்ள தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார். இந்த புத்தக திருவிழாவில் 25 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வகையான புத்தகங்களும் அங்கு கிடைக்கின்றன. தமிழ் மட்டுமின்றி சில குறிப்பிட்ட வகையான ஆங்கில புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. முதல் முறையாக பெங்களூருவில் தமிழ் புத்தக திருவிழா நடைபெறுவதால் இங்கு வசிக்கும் தமிழர்கள் ஆர்வமாக வந்து புத்தகங்களை வாங்கி செல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் இலக்கிய கருத்தரங்குகள், புத்தக வெளியீட்டு விழா போன்றவை நடத்தப்படுகின்றன. பல்லாங்குழி, தாயம் போன்ற தமிழ் மரபு விளையாட்டுகள், அங்கு வருகிறவர்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. அதுபற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.
நம்ப வேண்டும்
இந்த நிலையில் இந்த புத்தக திருவிழாவின் 4-வது நிகழ்ச்சி நேற்று தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் தமிழ் குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தமிழ் புத்தகங்களை வழங்கினார். இதில் அவர் பேசும்போது கூறியதாவது:-
படிப்பதற்கு உங்களுக்கு(குழந்தைகள்) முழு சக்தியையும் இறைவன் வழங்கியுள்ளார். இதை நீங்கள் நம்ப வேண்டும். நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இறைவன் எனது மூலமாக உங்களுக்கு அறிவுரை கூறுகிறார். உங்களின் பெற்றோர் கனவு மற்றும் உங்களின் கனவு நனவாக நீங்கள் கல்வி கற்க முயற்சி செய்ய வேண்டும். கல்வி மிக முக்கியம். ஒருவர் பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் கல்வி இல்லாமல் இருக்க கூடாது.
மாற்றத்தை கொடுக்கும்
அதனால் தான் நான் உங்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற தூண்டுகோலாக இருக்கும் புத்தகங்களை உங்களுக்கு வழங்கியுள்ளேன். இந்த புத்தகங்களை நீங்கள் நிச்சயமாக படிக்க வேண்டும். இது உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும். புத்தகத்தை வழிகாட்டியாக பயன்படுத்துங்கள். கல்வி பயின்றால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும். நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி முக்கியமான நாள். அது தமிழ் பொங்கல். தை பிறந்தால் வழி பிறக்கும். அன்றைய தினம் முக்கியமான நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு ராம்பிரசாத் மனோகர் கூறினார்.
இதில் தமிழ் புத்தக திருவிழா குழு தலைவர் வணங்காமுடி, தமிழ் ஆசிரியை கார்த்தியாயினி உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சிந்தனைக்களம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிஷப் காட்டன் தொழில்முறை மேலாண்மை கல்லூரி முதல்வர் மார்ட்டீன் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். எழுத்தாளர் அப்துல் காதர் கலந்து கொண்டு பேசினார். இந்த விழாவில் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சொற்பொழிவு-பாடல் போட்டிகள்
கோலார் தங்கவயலில் இருந்து உலக தமிழ் கழகத்தில் பயிலும் தமிழ் குழந்தைகள் நேற்று புத்தக திருவிழாவுக்கு வந்தனர். அவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சொற்பொழிவு போட்டியில் கலந்து கொண்டவர்களில் மர்பி டவுன் மாநகராட்சி பள்ளி மாணவி அருள்மொழி முதல் பரிசையும், அதே பள்ளியை சேர்ந்த மாணவி பிரித்திகா 2-வது பரிசையும், தூய அல்போன்ஸ் உயர்நிலைப்பள்ளி மாணவி ரூபிசாரா 3-வது பரிசையும் பெற்றனர். மாணவி வரலட்சுமிக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.
பாடல் போட்டியில் மாணவி சரண்யா முதல் இடத்தையும், மாணவி ரூபிசாரா 2-வது இடத்தையும், மாணவி கமலி 3-வது இடத்தையும் பிடித்தனர். மாணவி பிளசிக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. அவர்களுக்கு பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் பரிசு வழங்கி பாராட்டினார். இந்த போட்டிகளுக்கு நடுவர்களாக ஆசிரியர்கள் சுப்பிரமணியம், சரஸ்வதி ஆகியோர் பொறுப்பேற்று செயல்பட்டனர்.