< Back
தேசிய செய்திகள்
வேறொருவருடன் தொடர்புபடுத்தி பேச்சு: கணவரை கோடரியால் வெட்டி கொன்ற மனைவி
தேசிய செய்திகள்

வேறொருவருடன் தொடர்புபடுத்தி பேச்சு: கணவரை கோடரியால் வெட்டி கொன்ற மனைவி

தினத்தந்தி
|
19 May 2024 7:56 AM IST

அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர் கணவரை கொலை செய்து விட்டதாக மனைவி நாடகமாடினார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் வாடா தாலுகாவை சேர்ந்தவர் அஜய் (வயது26). இவரது மனைவி அனிதா (22). இவர் நேற்று முன்தினம் இரவு போலீசாரை தொடர்புகொண்டு, இரவு தானும், தனது கணவர் அஜய் வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கணவர் அஜயை படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுவிட்டதாக கூறி கதறி அழுதார்.

இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த அஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அனிதா போலீசாரிடம் கொலை குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அனிதா தான் தனது கணவரை கொலை செய்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

கொலையான அஜய், தனது மனைவி அனிதாவின் நடத்தையில் சந்தேகம் கொண்டார். வேறொரு வாலிபருடன் தொடர்புப்படுத்தி பேசி அனிதாவிற்கு தொல்லை கொடுத்து வந்தார். இவரது செயல் மனைவி அனிதாவிற்கு எரிச்சலூட்டியது. எனவே தனது கணவரை கொலை செய்ய அனிதா முடிவு செய்தார். அதன்படி சம்பவத்தன்று இரவு உணவிற்கு பின் அஜய் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, அனிதா வீட்டில் இருந்த கோடரியை எடுத்துவந்து கணவரை வெட்டி கொலை செய்தார்.

பின்னர் கொலை பழியில் இருந்து தப்பிக்க திட்டமிட்ட அவர், போலீசாரிடம் அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர் கணவரை கொலை செய்து விட்டதாக கூறி நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அனிதாவை கைது செய்தனர். இவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்