< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி பற்றி கெட்ட சகுனம் என பேச்சு; ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி பற்றி கெட்ட சகுனம் என பேச்சு; ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை

தினத்தந்தி
|
7 March 2024 8:32 PM IST

ராகுல் காந்தி பொதுவெளியில் பேசும்போது அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

ராஜஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலையொட்டி, பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, பிரதமர் மோடி பிரச்சனைகளை திசை திருப்ப முயல்கிறார். அவர் தொலைக்காட்சியில் தோன்றி, இந்து-முஸ்லிம் என கூறுகிறார். சில சமயங்களில் கிரிக்கெட் போட்டியை காண போகிறார். உலக கோப்பையை நமது வீரர்கள் வென்றிருக்க கூடும்.

ஆனால், கெட்ட சகுனத்தினால், போட்டியில் தோல்வி அடைந்தோம் என பேசினார். பி.எம். என்றால் பனாடி மோடி (பனாடி என்றால் தீய சகுனம் என்று அர்த்தம்) என கூறினார். குஜராத்தின் ஆமதாபாத் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது.

அப்போது, பிரதமர் மோடி போட்டியை நேரில் காண சென்றார். இதனாலேயே, இந்தியா தோல்வி அடைந்தது என்ற வகையில் ராகுல் காந்தி பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. அவருடைய இந்த பேச்சுக்கு, பா.ஜ.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அவரது பேச்சு ரசிக்கும்படி இல்லை என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தேர்தல் பிரசாரத்தின்போது நட்சத்திர பிரசாரகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. இதனை பின்பற்றும்படி தேர்தல் ஆணையம், ராகுல் காந்தியிடம் நேற்று கேட்டு கொண்டது. இதேபோன்று பொதுவெளியில் பேசும்போது அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அவருக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.

மேலும் செய்திகள்