பெண் சக்தி பற்றி பேசினால் காங்கிரஸ் கிண்டல் செய்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
|பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி நான் எப்போதெல்லாம் பேசுகிறேனோ, அப்போது, காங்கிரஸ் போன்ற கட்சிகள் என்னை கேலியும், அவமதிப்பும் செய்கின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பெண்களுக்கு கழிவறைகள், நாப்கின்கள், சுகாதாரமற்ற சமையலறைகள், பெண்களின் அன்றாட பயன்பாட்டுக்காக குழாயில் தண்ணீர் உள்ளிட்ட பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பல்வேறு விசயங்களை பற்றி டெல்லி செங்கோட்டையில் பேசிய முதல் பிரதமராக நான் இருக்கிறேன் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றி நான் எப்போதெல்லாம் பேசுகிறேனோ, அப்போது, காங்கிரஸ் போன்ற கட்சிகள் என்னை கேலியும், அவமதிப்பும் செய்கின்றன என கூறியுள்ளார்.
இதேபோன்று, பெண் குழந்தைகளை பாதுகாப்போம், கர்ப்பிணி தாய்மார்களுககு ரூ.6 ஆயிரம் ஊட்டச்சத்துக்கான உதவி தொகை, கல்வி பயிலும்போது பயன்பெற உதவும் சுகன்ய சம்ரிதி திட்டங்கள், தொழில் முனைவோராக பலன்பெற முத்ரா யோஜனா திட்டம், கர்ப்பகால விடுமுறை விரிவாக்கம், இலவச மருத்துவ சிகிச்சை, போதிய மருந்துகள் மற்றும் பிரதமர் பெயரிலான திட்டத்தின் கீழ் பெண்களின் பெயரில் வீடுகளை பதிவு செய்தல் ஆகியவற்றை பற்றி பிரதமர் மோடி பேசினார்.
அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனை படைப்பது பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாட்டில் தொழில் நுட்ப புரட்சியை பெண்கள் சக்தி வழிநடத்தி செல்லும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் கூறியுள்ளார்.