பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி நடத்துவது ஏன்? - கார்கே விளக்கம்
|பாரத் ஜோடோ நியாய யாத்திரை நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியினரிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தி கட்சியை வலுப்படுத்தும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார். இந்திய ஒற்றுமை பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை மேற்கொண்ட இந்த பாத யாத்திரை பெரும் வரவேற்பை பெற்றது. கட்சிக்கு மிகப் பெரிய புத்துணர்ச்சியை அளித்தது.
இந்த யாத்திரை வெற்றியடைந்த நிலையில், அடுத்து நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையிலான யாத்திரையை நடத்த ராகுல் திட்டமிட்டுள்ளார். மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த பாத யாத்திரையை வருகிற 14-ம் தேதி ராகுல் காந்தி தொடங்க உள்ளார். இந்த யாத்திரைக்கு 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மொத்தம் 6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரை பேருந்துகளிலும், நடைபயணத்திலும் மேற்கொள்ளப்படும் என்றும் 110 மாவட்டங்களையும், சுமார் 100 மக்களவைத் தொகுதிகளையும், 337 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பிரச்சனைகளை எழுப்புவதற்கு அரசு வாய்ப்பளிக்காததால், பாரத் ஜோடோ நியாய யாத்திரையை நடத்துவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
"பாரத் ஜோடோ நியாய யாத்திரை நாட்டின் அடிப்படை சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தும். யாத்திரையில் பங்கேற்க 'இந்தியா' கூட்டணியின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பிரச்சனைகளை எழுப்புவதற்கு அரசு எங்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அதனால் காங்கிரஸ் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மேற்கொள்கிறது. இந்த யாத்திரை மூலம் நாங்கள் மக்களைக் கேட்போம்.
எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதற்காக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு அப்பட்டமாக தவறாகப் பயன்படுத்துகிறது. அரசு கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் மற்றும் குற்றவியல் சட்டங்கள் சர்வாதிகாரத்தின் அறிகுறிகளை காட்டுகின்றன.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் பங்கேற்பது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன்" என்று கூறினார்.