வெளிநாடுகளில் இந்தியா குறித்து ராகுல் காந்தி பேசுவது நல்லதல்ல-வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
|வெளிநாடுகளில் இந்தியாவின் அரசியல் குறித்து ராகுல் பேசுவது தேச நலனுக்கு நல்லதல்ல என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.
புதுடெல்லி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:-
நம்பிக்கையும் திறமையும் கொண்ட நாடாக உலகம் இந்தியாவைப் பார்க்கிறது. இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என உலகம் குறிப்பாக தெற்குலகம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.
உலகின் பெரும்பாலான நாடுகள் வளர்ச்சிக்கான பங்குதாரராக இந்தியாவைப் பார்க்கின்றன. அதோடு, பொருளாதார ஒத்துழைப்பாளராகவும் உலக நாடுகள் இந்தியாவைப் பார்க்கின்றன. தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதன்மூலம் இளைஞர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.
இந்தியா அதன் அண்டை நாடுகளில் பொருளாதார தாக்கத்தை அதிக அளவில் ஏற்படுத்துகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் = பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும்.
ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம் இந்தியாவை விமர்சிப்பதும், நமது அரசியல் குறித்து கருத்து தெரிவிப்பதும் வாடிக்கையாக கொண்டு உள்ளார்.
உலகம் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் ஒரு சமயத்தில் ஒரு கட்சி வெற்றி பெறுகிறது. வேறொரு சமயத்தில் வேறொரு கட்சி வெற்றி பெறுகிறது. இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்றால், இதுபோன்ற மாற்றங்கள் நடைபெறாது. தேர்தலின் அனைத்து முடிவுகளும் ஒன்றுபோலவே இருக்கும்.
இந்தியாவுக்குள் அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், நாட்டுக்கு வெளியே நாட்டின் அரசியல் குறித்துப் பேசுவது நாட்டு நலனுக்கு நல்லது அல்ல என கூறினார்.