< Back
தேசிய செய்திகள்
தலித் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் - தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்
தேசிய செய்திகள்

தலித் சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் - தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

தினத்தந்தி
|
16 Aug 2022 9:41 PM IST

சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ராஜஸ்தான் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் சுரானா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்வால் என்ற தலித் சிறுவன் படித்துவந்தான்.

9 வயதான அந்தச் சிறுவன், பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளான். அப்போது பள்ளி ஆசிரியர் அவனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதில் படுகாயமடைந்த அச்சிறுவன், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். ஜூலை 20ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஆகஸ்ட் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். .

இதனையடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த செயலுக்கு கணடனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் காவல்துறை அதிகாரிகள் குற்றவாளியைக் கைது செய்தனர். 40 வயதான சைல் சிங் என்ற ஆசிரியரை கைது செய்த போலீசார், அவர் மீது கொலைக் குற்றம் சாட்டியுள்ளனர்.

தலித் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ராஜஸ்தான் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்), மாவட்ட ஆட்சியருக்கு எழுதிய கடிதத்தில், இந்த விவகாரம் தீவிரமானது என்றும், எப்ஐஆரின் நகல்களைக் கோரியுள்ளது.

இது தொடர்பாக மாநில கல்வித்துறையும் விசாரணையை தொடங்கியுள்ளது.

மேலும் செய்திகள்