< Back
தேசிய செய்திகள்
சிரியா மீது இஸ்ரேல் வான்தாக்குதல்: விமான நிலையம் மூடப்பட்டது

Image Courtacy: AFP

தேசிய செய்திகள்

சிரியா மீது இஸ்ரேல் வான்தாக்குதல்: விமான நிலையம் மூடப்பட்டது

தினத்தந்தி
|
29 Aug 2023 3:54 AM IST

சிரியா மீது இஸ்ரேல் சரமாரி வான்தாக்குதல் நடத்தியது. இதில் விமான நிலையம் சேதம் அடைந்ததால் மூடப்பட்டது.

டமாஸ்கஸ்,

இஸ்ரேல்-சிரியா இடையே எல்லை பிரச்சினை, பயங்கரவாத தாக்குதல் போன்ற காரணங்களால் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. மேலும் இஸ்ரேலின் எதிரி நாடான ஈரானின் ராணுவதளம் சிரியா தலைநகர் டமாஸ்கசில் செயல்படுகிறது.

இந்த ஈரான் ராணுவத்தினர் லெபனானில் உள்ள ஹெஸ்பெல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு அளிக்கின்றனர். எனவே அவர்களுக்கு சிரியா அடைக்கலம் கொடுப்பது இரு நாடுகளுக்கும் பிரச்சினை ஏற்பட முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

சரமாரி குண்டுவீச்சு

இந்த பயங்கரவாத அமைப்பினர் ஈரானில் இருந்து ஆயுதங்களை கொண்டு வர உதவியாக உள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக சிரியாவில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் தலைநகர் டமாஸ்கஸ் உள்பட 2 முக்கிய விமான நிலையங்களில் இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து இஸ்ரேலின் ராணுவ விமானங்கள் பறந்து வந்தன. அவை சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீது சரமாரி வான்தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

ஓடுபாதை சேதம்

இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் விமான நிலையத்தின் ஓடுபாதை சேதம் அடைந்ததால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் விமான நிலையத்துக்கு வந்திருந்த பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் எந்தவித தகவலும் அளிக்கப்படவில்லை. எனினும் மிக அரிதாகவே இதுபோன்ற தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்பதாக சிரியா குற்றம்சாட்டி உள்ளது.

மேலும் செய்திகள்