சுவாதி மாலிவால் விவகாரம்: கெஜ்ரிவால் மீது பா.ஜனதா குற்றச்சாட்டு
|சுவாதி மாலிவால் விவகாரத்தில் கெஜ்ரிவால் தனது உதவியாளரை காக்க முயற்சிக்கிறார் என பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.
புதுடெல்லி,
ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை எம்.பி. சுவாதி மாலிவால். இவர் கடந்த 13-ந்தேதி காலை டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக டெல்லி போலீசில் சுவாதி மாலிவால் அளித்த புகாரில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் தன்னை 8 முறை கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கவைக்க பா.ஜ.க. தீட்டிய சதித்திட்டத்தின் முகமாக சுவாதி மாலிவால் உள்ளார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியது. இந்த நிலையில், சுவாதி மாலிவால் விவகாரத்தில் கெஜ்ரிவால் தனது உதவியாளரை காக்க முயற்சிக்கிறார் என பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் மற்றும் பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது பேசிய பிரமோத் சாவந்த், "டெல்லி முதல்-மந்திரியின் இல்லத்தில் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக போலீசாரிடம் சுவாதி மாலிவால் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் கெஜ்ரிவால் மவுனம் காப்பது ஏன்? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரது அமைதியே பல விஷயங்களை சொல்கிறது. ஆம் ஆத்மி கட்சி டெல்லிக்கும், பெண்களுக்கும் எதிரான கட்சி" என்று விமர்சித்தார்.
இதைத் தொடர்ந்து சுதான்ஷு திரிவேதி பேசுகையில், "டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் சி.சி.டி.வி. பொருத்தப்படுவதை தனது அரசாங்கம் உறுதி செய்யும் என்று கெஜ்ரிவால் கூறினார். ஆனால் அவரது இல்லத்திலேயே அந்த வசதி இல்லையா? பிபவ் குமாருக்கு ஆம் ஆத்மி கட்சியில் எந்த பதவியும் இல்லை, ஆனால் அவருக்கு பல முக்கியமான ரகசியங்கள் தெரிந்திருக்கலாம்" என்று தெரிவித்தார்.