< Back
தேசிய செய்திகள்
கேரள தங்க கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ், பெங்களூரு போலீஸ் நிலையத்தில் ஆஜர்
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் விவகாரம்: ஸ்வப்னா சுரேஷ், பெங்களூரு போலீஸ் நிலையத்தில் ஆஜர்

தினத்தந்தி
|
18 March 2023 3:15 AM IST

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கொலை மிரட்டல் வந்தது தொடர்பாக பெங்களூரு போலீஸ் நிலையத்தில் ஸ்வப்னா சுரேஷ் ஆஜரானார்.

பெங்களூரு:

கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் கொலை மிரட்டல் வந்தது தொடர்பாக பெங்களூரு போலீஸ் நிலையத்தில் ஸ்வப்னா சுரேஷ் ஆஜரானார்.

தங்கம் கடத்தல் வழக்கு

கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக ஐக்கிய அரபு அமீரக தூதரக பெயரில் கடந்த 2020-ஆண்டு வந்த பார்சல்களில் சுமார் ரூ.16 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழங்கில் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவியாக இருந்ததாக முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கரும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள ஸ்வப்னா சுரேஷ், கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்களை கூறி வந்தார்.

கொலை மிரட்டல்

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி விஜேஸ் பிள்ளை என்பவர், தன்னை ஒயிட்பீல்டு மெயின் ரோட்டில் உள்ள ஓட்டலில் சந்தித்து பேசினார். அப்போது 'கேரள மாநில முதல்-மந்திரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தேவையில்லாமல் குற்றச்சாட்டு கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். அவர்களுக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும்.

இதற்காக சி.பி.ஐ.(எம்) கட்சி ரூ.30 கோடியை கொடுக்க இருக்கிறது. இந்த தகவலை அக்கட்சியின் மாநில செயலாளர் கோவிந்தன் சொல்லி அனுப்பினார். அவர் சார்பாக நான் வந்துள்ளேன்' என்று விஜேஷ் பிள்ளை தன்னிடம் கூறியதாக ஸ்வப்னா சுரேஷ் கூறினார். மேலும் விஜேஷ் பிள்ளை தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்தார்.

போலீஸ் நிலையத்தில் ஆஜர்

இந்த தகவலை அமலாக்க துறையிடமும், மகாதேவபுரா போலீஸ் நிலையத்திலும் ஸ்வப்னா சுரேஷ் கூறி புகார் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக மகாதேவபுரா போலீஸ் நிலையத்தில் நேற்று காலை 11 மணிக்கு விஜேஷ் பிள்ளை ஆஜரானார். அவரிடம் போலீசார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பின்னர் இரவு 8 மணிக்கு ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரத் ஆகிய இருவரும் மகாதேவபுரா போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்