திருவண்ணாமலை வாலிபர் மர்மசாவு
|பெங்களூருவில் திருவண்ணாமலை வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சாலையோரம் பிணமாக கிடந்தார்.
பண்டேபாளையா:
தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணா(வயது 20). இவர் பெங்களூரு பண்டேபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். அந்த ஓட்டல் சார்பில் அவருக்கு தங்கும் அறை வழங்கப்பட்டு இருந்தது. அவருக்கு வேலையில் போதிய சம்பளம் கிடைக்காததால், சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும் என ஓட்டல் உரிமையாளரிடம் கூறி உள்ளார். ஆனால் சம்பளம் உயர்த்தி வழங்க அவர்கள் மறுத்துள்ளனர். இதையடுத்து அவர் அந்த வேலையை விட்டு, வேறு வேலை தேடி உள்ளார். இந்த நிலையில் முனேஷ்வாராநகர் பகுதியில் சாலையின் ஓரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது.
இதுகுறித்து பண்டேபாளையா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தமிழகத்தை சேர்ந்த சரவணா என்பது தெரிந்தது. அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அவரை மர்மநபர்கள் அடித்து கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.