நடத்தையில் சந்தேகம்: மனைவியை கட்டையால் அடித்துக்கொன்ற தொழிலாளி
|நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை தொழிலாளி கட்டையால் அடித்துக்கொலை செய்தார்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் அம்பலத்தரா பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி தாமோதரன். இவருடைய மனைவி பீனா. இதற்கிடையில் மனைவியின் நடத்தையில் தாமோதரனுக்கு சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று தம்பதியினர் தகராறில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த தாமோதரன் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து பீனாவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தாமோதரன் நேரடியாக அம்பலத்தரா போலீஸ் நிலையத்துக்கு சென்று அங்கு தனது மனைவியை அடித்து கொலை செய்து விட்டதாக கூறி போலீசில் சரண் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று பீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தாமோதரனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.