< Back
தேசிய செய்திகள்
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கோடரியால் தாக்கி கொன்ற கணவன்
தேசிய செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கோடரியால் தாக்கி கொன்ற கணவன்

தினத்தந்தி
|
19 Feb 2024 8:27 AM IST

மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

விஜயாப்புரா,

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் திக்கோடு தாலுகா உபனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரேஷ்மா . இவரது கணவர் அசோக் (33). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக தனது மனைவியின் நடவடிக்கையில் அசோக்கிற்கு சந்தேகம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவர் தனது மனைவியுடன் அடிக்கடி அதுபற்றி கேட்டு வாக்குவாதம் செய்து வந்துள்ளார். அப்போது தனது மனைவியை அடித்து அசோக் துன்புறுத்தி உள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று ரேஷ்மாவுக்கும், அசோக்கிற்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மதுபோதையில் இருந்த அசோக், தனது மனைவியை அடித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த கோடரியால் தாக்கி ரேஷ்மாவை கொலை செய்தார். இதில் ரத்த வெள்ளத்தில் ரேஷ்மா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தொழிலாளி அங்கிருந்து தப்பி சென்றார். இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் உடனடியாக திக்கோடு புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அவர்கள் கொலையான ரேஷ்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுபற்றி விசாரணை நடத்தினர். அப்போது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், அதேபோல் சம்பவத்தன்றும் வாக்குவாதம் ஏற்பட்டதும், மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய தொழிலாளியை வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்