மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக சந்தேகம்; 5 பேர் அடித்துக்கொலை - சத்தீஷ்காரில் பயங்கரம்
|மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் 5 பேர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் ஏக்தால் என்ற கிராமம் உள்ளது. பழங்குடி மக்கள் அதிக அளவில் வசித்து வரும் இந்த கிராமத்தில், மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், 3 பெண்கள் உள்பட 5 பேர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மவுசம் கண்ணா(34), அவரது மனைவி மவுசம் பிரி, மவுசம் புச்சா(34), அவரது மனைவி மவுசம் அர்ஜோ(32) மற்றும் கர்கா லச்சி(43) என்ற பெண் ஆகிய 5 பேர் கிராமத்தினரால் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சவ்லம் ராஜேஷ்(21), சவ்லம் ஹித்மா, கராம் சத்யம்(35), முகேஷ்(28) மற்றும் பொடியம் என்கா ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த வியாழக்கிழமை, இதே போல் மாந்திரீகம் செய்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், சத்தீஷ்காரின் பலோதாபசார் மாவட்டத்தில் ஒரு சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடித்துக்கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.