'எம்.பி.க்களின் இடைநீக்கம் ஜனநாயகத்துக்கு ஆபத்து' - டி.ஆர்.பாலு கண்டனம்
|எம்.பி.க்களின் இடைநீக்கம் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு அதற்கு கண்டனம் தெரிவித்தார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இருந்து மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற நடைமுறை மக்களவையில் இதுவரை இல்லை. அவையில் அக்னிபத் திட்டம், விலைவாசி உயர்வு, மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசவேண்டும் என்று கடந்த வாரம் நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும் கூறினோம். அதைத்தானே தற்போது இந்த உறுப்பினர்களும் கூறியுள்ளனர்' என தெரிவித்தார்.
மக்களவையின் இத்தகைய முடிவு ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்றும், தி.மு.க. இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறது என்றும் கூறிய டி.ஆர்.பாலு, தமிழக முதல்-அமைச்சரும் இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார்.