பிரதமர் வருகையையொட்டி போடப்பட்ட சாலையில் பள்ளம்: மாநகராட்சி என்ஜினீயர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்
|பிரதமர் வருகையையொட்டி போடப்பட்ட சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் மாநகராட்சி என்ஜினீயர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
பெங்களூருவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி ஞானபாரதி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் தார் சாலை போடப்பட்டது. பிரதமர் வந்து சென்ற 3-வது நாளிலேயே அந்த சாலையில் தார் பெயர்ந்து பள்ளமாக மாறியது. இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி கர்நாடக அரசுக்கு, பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டு இருந்தது. மேலும் கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷாா் கிரிநாத் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது.
அத்துடன் பிரதமர் அலுவலகத்திற்கும், புதிதாக போடப்பட்ட சாலையில் பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மாநகராட்சி சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பிரதமர் வருகையையொட்டி போடப்பட்ட சாலை தரமற்ற முறையில் இருப்பதால் பள்ளம் உண்டாகி இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது அந்த சாலையில் 40 எம்.எம். அளவுக்கு தாா் போடுவதற்கு பதிலாக 30 எம்.எம். அளவுக்கு மட்டுமே தார் போடப்பட்டு இருந்ததாக மாநகராட்சி தலைமை கமிஷனரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநகராட்சி என்ஜினீயர்களான ரவி மற்றும் விஸ்வேஷ் ஆகிய 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.