ஒடிசாவில் உள்ள தொங்கு பாலம் பழுதுபார்க்கும் பணிக்காக நாளை மூடல்..!
|ஒடிசாவில் உள்ள தொங்கு பாலம் பழுதுபார்க்கும் பணிக்காக நாளை ஒரு நாள் மூடப்படுகிறது.
புவனேஸ்வர்,
குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள பாலம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, ஒடிசா அரசு கட்டாக் மாவட்டம் தபாலேஷ்வரில் உள்ள மகாநதி ஆற்றின் மீது உள்ள தொங்கு பாலத்தில் பழுது பார்க்கும் பணி நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக நாளை ஒருநாள் பாலம் மூடப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்டாக் மாவட்டம் அதாகரில் உள்ள மகாநதி ஆற்றின் தீவில் உள்ள தபாலேஸ்வர் சிவன் கோவிலை இணைக்கும் தொங்கு பாலம் 2006-ல் கட்டப்பட்டு தற்போது வலுவிழந்துள்ளது. எனவே, உள்ளாட்சி நிர்வாகம் தற்போது அதன் அதிகபட்ச திறனை 600 நபர்களில் இருந்து 200 நபர்களாகக் கட்டுப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்டாக் மாவட்ட கலெக்டர் பபானி சங்கர் சயானி, தொங்கு பாலத்தை நேற்று தொழில்நுட்பக் குழு பார்வையிட்டு அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் கூடுதல் மாவட்ட கலெக்டர் தலைமையிலான மற்றொரு குழு மேலதிக ஆய்வுக்காக பாலத்திற்கு விரைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
பழுது பார்க்கும் பணிகளுக்காக நாளை பாலம் மூடப்படும் என்றும் பாலம் பாதுகாப்பாக இருந்தால், குறைந்தபட்ச கொள்ளளவுடன் பயன்படுத்தப்படும் என்றும் தேவைப்பட்டால், பாலம் முழுவதுமாக மூடப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு மாற்றாக, தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இயந்திரப் படகுகள் இயக்கப்படும் என்றும் அதன் மூலம் பக்தர்கள் கோவிலுக்குச் செல்லலாம் அவர் கூறினார். மேலும் தீயணைப்பு சேவைகள் மற்றும் ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கை படை (ODRAF) பணியாளர்கள் பாலத்தின் அருகே நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.