''கேள்வி எழுப்பியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது''- கனிமொழி எம்.பி.
|கேள்வி கேட்பவர்களை சஸ்பெண்ட் செய்வதே அரசின் நடவடிக்கையாக உள்ளது என கனிமொழி எம்.பி. கூறினார்.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், உள்துறை மந்திரி அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இரு அவையிலும் முழக்கங்களை எழுப்பினர்.
குறிப்பாக, மக்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேர் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக கனிமொழி எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; கேள்வி கேட்பவர்களை சஸ்பெண்ட் செய்வதே அரசின் நடவடிக்கையாக உள்ளது. நாடாளுமன்றம் பாதுகாப்பு இல்லாத இடமாக இருப்பதற்கு நேற்று நடைபெற்ற சம்பவமே எடுத்துக்காட்டு.
பாதுகாப்பு குறைபாடு குறித்து பிரதமரோ, உள்துறை மந்திரியோ கண்டுகொள்ளவில்லை. கேள்வி எழுப்பியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. அவையில் இல்லாத எம்.பி-யை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்."
இவ்வாறு அவர் கூறினார்.