< Back
தேசிய செய்திகள்
தொடர்ந்து நடைபெறும் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்களின் 50 மணிநேர பகல்-இரவு போராட்டம்!
தேசிய செய்திகள்

தொடர்ந்து நடைபெறும் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்களின் 50 மணிநேர பகல்-இரவு போராட்டம்!

தினத்தந்தி
|
28 July 2022 8:02 AM IST

சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டதாக, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.மேலும், மாநிலங்களவையில் நேற்று பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 19 பேர் இந்த வாரம் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 பேர், தி.மு.க.வை சேர்ந்த 6 பேர், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியை சேர்ந்த 3 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 பேர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஒருவர் என ௧௯ எம்.பி.க்கள் இந்த வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்ஜய் சிங், இந்த வாரத்தின் மீதமுள்ள நாட்களில் அவையில் இருந்து சஸ்பெண்டு செய்யப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டது.

சஞ்ஜய் சிங் அவை நடவடிக்கையின் போது அவை தலைவரை நோக்கி காகிதங்களை வீசியுள்ளார். அதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த வாரத்திற்கு அவையில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்து உள்ளது.

சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.பி.க்கள் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தங்களது கைகளில், 23 எம்.பி.க்களை மோடி மற்றும் அமித்ஷா சஸ்பெண்டு செய்து விட்டனர் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி உள்ளனர்.இந்த போராட்டம் 50 மணிநேர பகல்-இரவு போராட்டம் ஆக இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

இதன்படி, இரவு பகல் பாராமல் அவர்கள் அந்த இடத்தில் இருந்து அகலாமல் அமர்ந்தபடி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றும் போராட்டம் தொடருகிறது.இந்த போராட்டம் நாளை மதியம் 1 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்