குடகில் விவசாயி வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு
|குடகில் விவசாயி வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
குடகு-
பொன்னம்பேட்டை தாலுகாவில், முன்விரோதம் காரணமாக விவசாயியை கொலை செய்திட திட்டமிட்டு அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.
விவசாயி
குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை தாலுகா பாளையாமுண்டூரு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொடச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாச்சய்யா. விவசாயி. இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பு ஒரே மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்து நின்றனர். அவர்கள் திடீரென்று தாங்கள் கைகளில் வைத்திருந்த துப்பாக்கிகள் மூலம் மாச்சய்யாவின் வீட்டின் மீது சரமாரியாக சுட்டனர். இதில் மாச்சய்யாவின் வீட்டின் படுக்கை அறை வரைக்கும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன.
இந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் மாச்சய்யா, அவரது மனைவி, அவரது மகள் சவுமியா ஆகியோர் இருந்துள்ளனர். ஆனால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் இருவரும் தலா 4 ரவுண்டு வரை துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தடயங்கள் சேகரிப்பு
இந்த சம்பவத்தால் வீட்டில் இருந்த மாச்சய்யா, அவரது மனைவி, மகள் சவுமியா ஆகியோர் கூச்சல் சத்தம் போட்டனர். அவர்களது கூச்சல் சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் தேவராஜு ஓடி வந்தார். பின்னர் அவர் இதுபற்றி ஸ்ரீமங்களா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார் தாங்கள் கைப்பற்றிய தடயங்களை ஆய்வுக்காக தடய அறிவியல் பிரிவினருக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மாச்சய்யாவை முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முயற்சித்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அந்த கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த மர்ம நபர்களையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.