< Back
தேசிய செய்திகள்
மைசூரு தசரா விழாவில் பங்கேற்க 4 முகாம்களில் ஆய்வு செய்து 20 யானைகள் பட்டியல் தயாரிப்பு; 15 யானைகளை இறுதி செய்ய முடிவு
தேசிய செய்திகள்

மைசூரு தசரா விழாவில் பங்கேற்க 4 முகாம்களில் ஆய்வு செய்து 20 யானைகள் பட்டியல் தயாரிப்பு; 15 யானைகளை இறுதி செய்ய முடிவு

தினத்தந்தி
|
18 July 2022 3:26 AM IST

மைசூரு தசரா விழாவில் பங்கேற்க 4 முகாம்களில் ஆய்வு செய்து 20 யானைகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 15 யானைகளை இறுதி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மைசூரு:

மைசூரு தசரா விழா

கர்நாடக மாநிலம் மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையையொட்டி தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூரு தசரா விழா உலக புகழ்பெற்றதாகும். இந்த விழா 10 நாட்கள் நடக்கும். தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜம்புசவாரி ஊர்வலம் கொண்டாடப்படுகிறது. இதில் பல்வேறு யானைகள் பயிற்சி முகாம்களில் இருந்து 10 யானைகள் பங்கேற்கும்.

இதில், சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்து கம்பீர நடைபோட, மற்ற யானைகள் அதனை பின்தொடர்ந்து வரும். இதனை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த தசரா விழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மைசூருவில் திரள்வார்கள்.

யானைகள் தேர்வு செய்யும் பணி

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழா மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. அரண்மனை வளாகத்திலேயே ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை கோலாகலமாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு வருகிற அக்டோபர் மாதம் தசரா விழா நடக்க உள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு தசரா விழாவில் கஜபடையில் பங்கேற்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் கஜபடைக்கு தேர்வு செய்யப்படும் யானைகளை தசரா தொடங்கும் 3 மாதங்களுக்கு முன்பே மைசூருவுக்கு அழைத்து வந்து பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது. மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் யானைகளை தேர்வு செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

20 யானைகள் பட்டியல்

இந்த நிலையில் வனத்துறையினர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள யானைகள் பயிற்சி முகாம்களுக்கு சென்று 30-க்கும் மேற்பட்ட யானைகளை பார்வையிட்டு வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

2 நாட்களாக நடந்த பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் மத்திகோடு, ஆனேக்காடு, துபாரே, பந்திப்பூர் ஆகிய யானைகள் முகாம்களில் இருந்து 20 யானைகளை தேர்வு ெசய்து பட்டியலை வனத்துறையினர் தயாரித்துள்ளனர். இதில் 7 பெண் யானைகள் அடங்கும். இந்த பட்டியல் தசரா விழா கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் யானைகளின் உடல் நலம் குறித்து பரிசோதனை செய்து சான்றிதழும் இணைக்கப்பட்டுள்ளது.

நாளை (செவ்வாய்க்கிழமை) தசரா விழா தொடர்பாக அந்த கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து 15 யானைகளை இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தசரா விழாவில் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்பட 15 யானைகள் பங்கேற்க உள்ளது.

மேலும் செய்திகள்