< Back
தேசிய செய்திகள்
சுருக்குமடி வலை விவகாரம்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

சுருக்குமடி வலை விவகாரம்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
3 Jan 2023 7:44 PM IST

சுருக்குமடி வலை பயன்பாட்டை முறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

சுருக்குமடி வலை பயன்பாட்டை முறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுருக்குமடி வலைக்கு அனுமதி தந்தால், அதை உரிய இடத்தில்தான் பயன்படுத்துகிறார்கள் என்பதை யார் கண்காணிப்பார்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சென்று சுருக்குமடி வலையில் மீன்பிடிக்க மத்திய அரசு அனுமதிக்கிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தூரம் சென்ற பின் எந்த எல்லையில் மீன் பிடிக்கிறார்கள் என்பதை கண்டறிவது கடினம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

சுருக்குமடி வலை பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு தெரிவிக்கும் அச்சத்தையும் புறந்தள்ளிவிட முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், சுருக்குமடி வலையால் பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மீன்பிடி தொழில் விவகாரத்தில் மத்திய அரசு, மாநில இணைந்து பேசி ஒருமித்த கருத்தை எட்டலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. சுருக்குமடி வலை பயன்பாட்டிற்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்