டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கு: பயங்கரவாதியின் தூக்கு தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு
|டெல்லி செங்கோட்டை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதியின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 22-ந்தேதி பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த முகமது ஆரிப் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு தூக்கு தண்டனை விதித்து விசாரணை கோர்ட்டு கடந்த 2005-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும் 2007-ம் ஆண்டு உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவும் கடந்த 2011-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் முகமது ஆரிப் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு கூறியது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், 'இந்த விவகாரத்தை பரிசீலிக்கும்போது, மனுதாரரின் குற்றப்பழி நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவரது மறுஆய்வு மனுதள்ளுபடி செய்யப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முகமதுஆரிப்புக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.