அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
|ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி,
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை ஐகோர்ட்டு கடந்த மாதம் 19-ந் தேதி தள்ளுபடி செய்தது.
ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுத்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 30-ந் தேதி விசாரித்தது. செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் விசாரணையை தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதையடுத்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் 20-ந் தேதிக்கு (இன்றைக்கு) தள்ளிவைத்தது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வு இன்று (திங்கட்கிழமை) விசாரிக்கிறது.