< Back
தேசிய செய்திகள்
டாக்டர்கள் பாதுகாப்புக்காக தேசிய பணி குழு அமைத்த சுப்ரீம் கோர்ட்டு; எய்ம்ஸ் டாக்டர்கள் நன்றி
தேசிய செய்திகள்

டாக்டர்கள் பாதுகாப்புக்காக தேசிய பணி குழு அமைத்த சுப்ரீம் கோர்ட்டு; எய்ம்ஸ் டாக்டர்கள் நன்றி

தினத்தந்தி
|
21 Aug 2024 1:01 PM IST

சுப்ரீம் கோர்ட்டு அமைத்த 10 உறுப்பினர்கள் கொண்ட தேசிய பணி குழுவானது, மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை வழங்கும்.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். 23-ந்தேதி வரை அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணியிடங்களில் பாதுகாப்பை வழங்க கோரி இந்த போராட்டம் தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில், கடந்த 15-ந்தேதி போராட்டத்தின் ஒரு பகுதியாக சிலர், ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். கட்டிடத்திற்குள் இருந்த பல பொருட்களை அடித்து, நொறுக்கினர்.

இதனால், மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என கூறி தொடர்ந்து டாக்டர்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

இந்நிலையில், டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ தொழிலாளர்களின் நலன்களுக்காக தேசிய பணி குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு அமைத்துள்ளது. இதன்படி, 10 உறுப்பினர்கள் கொண்ட குழுவானது, மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை உருவாக்குவதற்கான, வன்முறையை தடுக்கும் வகையிலான பரிந்துரைகளை உருவாக்கும்.

இதேபோன்று, பாலினம் சார்ந்த வன்முறையை தடுப்பதற்கான செயல் திட்டம் ஒன்றையும் இந்த பணி குழுவானது தயாரித்து வழங்கும். தேசிய பணி குழுவை அமைத்த சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கைக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி டெல்லியில் எய்ம்ஸ் அமைப்பின் பயிற்சி டாக்டர்களுக்கான கூட்டமைப்பு இன்று வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், நோயாளிகள் நலனுக்கு ஈடு இணையற்ற சேவை வழங்குவதற்காக ஜந்தர் மந்தரில் இருந்து வெளிநோயாளிகள் பிரிவுக்கான சேவையை நாங்கள் இன்று வழங்குவோம் என தெரிவித்து உள்ளது.

பெண் டாக்டர் பலாத்கார வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு தங்களுடைய உண்மையான நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது.

எங்களுடைய சுகாதார நல பணியாளர்களை பாதிக்க கூடிய விசயங்களில் கவனம் செலுத்திய கோர்ட்டுக்கு நாங்கள் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்