< Back
தேசிய செய்திகள்
மிகுந்த கவனம் தேவை.. மரண வாக்குமூலத்தை வைத்து மட்டும் தண்டனை வழங்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு
தேசிய செய்திகள்

மிகுந்த கவனம் தேவை.. மரண வாக்குமூலத்தை வைத்து மட்டும் தண்டனை வழங்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டு

தினத்தந்தி
|
25 Aug 2023 2:28 PM IST

இறுதிக்கட்ட முடிவுக்கு வரவேண்டும் என்றால் மரண வாக்குமூலத்துடன் உரிய ஆதாரங்களும் காட்டப்படவேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

புதுடெல்லி:

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இர்பான் என்பவர் தனது இரண்டு சகோதரர்கள் மற்றும் மகனை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு கடந்த 2017ம் ஆண்டு கீழமை நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

இர்பான் இரண்டாவது திருமணம் செய்வது தொடர்பான பிரச்சனையில் இந்த கொலை நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. சகோதரர்கள் மற்றும் மகன் வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது இர்பான் வீட்டின் கதவை பூட்டி வீட்டுக்கு தீ வைத்ததாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 3 பேரும் உயிரிழந்தனர் என்றும் கூறப்பட்டது. இறப்பதற்கு முன்பு இரண்டு பேர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் இர்பானுக்கு கீழமை நீதிமன்றம் அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை அலகாபாத் உயர் நீதிமன்றம் 2018ல் உறுதி செய்தது.

இதையடுத்து இர்பான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், மரண வாக்குமூலத்தின் உண்மைத் தன்மை மீது இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு சாதகமாக்கி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.

"மரண வாக்குமூலத்தில் கூறப்படும் தகவல்களை மிக கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் மரண வாக்குமூலத்தை நீதிமன்றம் அப்படியே கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாது. வெறும் மரண வாக்குமூலத்தை வைத்து மட்டுமே தண்டனையை வழங்குவது நியாயமாக இருக்காது.

இறுதிக்கட்ட முடிவுக்கு வரவேண்டும் என்றால் மரண வாக்குமூலத்துடன் உரிய ஆதாரங்களும் காட்டப்படவேண்டும். இந்த வழக்கில் மரண வாக்குமூலத்தில் கூறப்பட்ட தகவலும், அந்த வீட்டில் தீப்பற்றியபோது இருந்த சூழலிலும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. எப்போதுமே வழக்கு விசாரணையில் ஏற்படும் சந்தேகத்தின் பலன் குற்றவாளிக்கு சாதகமாகவே இருக்கும். எனவே, மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டும் ஒருவருக்கு தண்டனை வழங்க முடியாது" என நீதிபதிகள் கூறினர்.

மேலும் செய்திகள்