வி.வி.பாட் சீட்டுகளை சரிபார்க்க கோரிய வழக்கு - தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
|வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை வி.வி.பாட் சீட்டுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 19-ந்தேதி(நாளை) தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடு முழுவதும் வாக்குகளை பதிவு செய்ய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்கள் தாங்கள் செலுத்திய வாக்கினை வி.வி.பாட் மூலம் சரிபார்க்க முடியும்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை வி.வி.பாட் சீட்டுடன் சரிபார்ப்பதை கட்டாயமாக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மேலும் வி.வி.பாட் இயந்திரத்தில் உள்ள கண்ணாடியை மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக ஒளிபுகா கண்ணாடியை வைக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை திரும்ப பெற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒளிபுகா கண்ணாடி மூலம் ஏழு வினாடிகள் விளக்கு எரியும்போது மட்டுமே வாக்காளர் வி.வி.பாட் சீட்டைப் பார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங் ஆஜராகி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
அதே சமயம் கேரளாவில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவின்போது பா.ஜ.க.வுக்கு அதிக வாக்குகள் பதிவானதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்றும், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உறுதி செய்யப்பட்டதால் தேர்தலில் மோசடிக்கு வாய்ப்பில்லை என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.