< Back
தேசிய செய்திகள்
பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தேசிய செய்திகள்

பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தினத்தந்தி
|
27 May 2024 3:04 PM IST

கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி பா.ஜ.க.வின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அக்கட்சி தொண்டர்களுக்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி நாளிதழில் பா.ஜ.க. விளம்பரம் வெளியிட்டதாக குற்றம்சாட்டி கடந்த வாரம் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நாளிதழ்களில் ஜூன் 4-ம் தேதி அல்லது மறுஉத்தரவு வரும் வரை பா.ஜ.க. விளம்பரங்களை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, கொல்கத்தா ஐகோர்ட்டில் பா.ஜ.க. மேல்முறையீடு செய்த நிலையில், அந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து விளம்பரத்திற்கான தடையை நீக்க கோரி பா.ஜ.க. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், இந்த மனு அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் தலைமையிலான கோடைக்கால அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், "பா.ஜ.க.வின் விளம்பரத்தை நாங்களும் பார்த்தோம், அது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை கேவலப்படுத்தும் வகையில் உள்ளது. பா.ஜ.க.வின் விளம்பரம் வாக்காளர்களின் நலன்களுக்கு ஆதரவாக இல்லை. மேலும் இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க நாங்கள் விரும்பவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க வேண்டும்." என்றனர்.

இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பா.ஜ.க.வின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கொல்கத்தா ஐகோர்ட்டின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை என கூறி பாஜகவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும் செய்திகள்