அனைத்து மீன்பிடி எந்திர படகுகளை பதிவு செய்யக்கோரி மனு விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
|அனைத்து மீன்பிடி எந்திர படகுகளை பதிவு செய்யக்கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
புதுடெல்லி,
அனைத்து மீன்பிடி எந்திர படகுகளை பதிவுசெய்து சான்றளிக்க மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிடக் கோரி நாகப்பட்டினத்தை சேர்ந்த செந்தில்குமார், ஜம்புலிங்கம் உள்ளிட்ட 9 மீனவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுவை தாக்கல் செய்தனர். வக்கீல் நரேந்திரகுமார் வர்மா தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் 12 லட்சம் மீனவர்கள் சுமார் 50 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகுகளை வைத்துள்ளனர். அதில் 50 சதவீத படகுகள் சேதமடைந்துள்ளன. படகுகள் இல்லாமல் மீனவர்கள் மிகப்பெரிய கஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். 40 முதல் 60 கடல் மைல்கள் சென்று மீன்பிடிக்கும் எந்திர படகுகளை தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே பதிவு செய்யவில்லை.
புதிய படகுகளை பதிவு செய்ய தமிழ்நாடு அரசு மறுப்பது ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுகளை மீறுவது மட்டுமின்றி பாரம்பரிய மீனவர்களையும், நீல பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. எனவே, அனைத்து மீன்பிடி எந்திர படகுகளை பதிவுசெய்ய மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பொதுநல மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, சஞ்சய்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் ஆஜராகி, படகுகளை பதிவு செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு ஏற்கனவே மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது என வாதிட்டார். அவரது வாதத்தையும், மனுவையும் விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டை நாட அறிவுறுத்தி பொதுநல மனுவை முடித்து வைத்தனர்.