< Back
தேசிய செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தேசிய செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தினத்தந்தி
|
28 Nov 2023 12:00 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஐகோர்ட்டு கடந்த மாதம் 19-ந் தேதி தள்ளுபடி செய்தது. ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு மீது கடந்த முறை நடந்த விசாரணையின்போது செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு நீதிபதிகள் பெலா திரிவேதி, சதீஷ் சந்திர வர்மா அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் செந்தில்பாலாஜியின் உடலில் இருக்கும் பிரச்சினைகளை மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம் என்றும், மருத்துவக் காரணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மருத்துவ காரணங்களுக்காக அல்லாமல் தகுதியின் அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனுவை பரிசீலிக்க முடியும். மேலும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனையடுத்து ஜாமீன் மனுவை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பு திரும்பப் பெற்றுக் கொண்டது.

மேலும் செய்திகள்