< Back
தேசிய செய்திகள்
திகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

திகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றக் கோரிய சுகேஷ் சந்திரசேகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
14 July 2022 5:01 AM IST

மிரட்டி பணம் பறித்த அதிகாரிகள், அவர்களுக்கு பணம் கொடுத்தவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய சுகேஷ் சந்திரசேகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

பல கோடி ரூபாய் பணமோசடி உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்றக் கோரி சுகேஷ் சந்திரசேகர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், மனுதாரருக்கு எதிராக என்ன குற்றச்சாட்டுகள் உள்ளன என கேட்டனர். அதற்கு சுகேஷ் சந்திரசேகர் சார்பில் ஆஜரான வக்கீல் வசந்த், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற வழக்குகள் உள்ளன என பதிலளித்தார்.

அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, சுகேஷ் சந்திரசேகர் சிறையில் இருந்துகொண்டு நூற்றுக்கணக்கான கோடி ரூபாயை மிரட்டிப் பறித்துள்ளார். அது கண்டுபிடிக்கப்பட்டவுடன் சிறையை மாற்றக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார் என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், சிறை அதிகாரிகளுக்கு மாதந்தோறும் லஞ்சம் அளித்துவிட்டு, தற்போது அச்சுறுத்தல் என்று புகார் தெரிவிக்கப்படுகிறதா, சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளதுபோல பெரிய அதிகாரிகள் மிரட்டி பணம் பறிக்கக் கூடாது. சிறை அதிகாரிகளுக்கு ரூ.12.5 கோடியை அளித்தது யார் என கேட்டதுடன், லஞ்சம் அல்லது மிரட்டி பணம் பறித்த திகார் அதிகாரிகள், அவர்களுக்கு பணம் கொடுத்தவர்களின் விவரங்களை தாக்கல் செய்ய சுகேஷ் சந்திரசேகருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்