மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்: இரு மாநில கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
|கேரளா மற்றும் மேற்கு வங்காள மாநில கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அம்மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதற்கு உதாரணமாக தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் அரசுக்கும், கவர்னருக்கும் பல்வேறு விவகாரத்தில் நீடிக்கும் மோதல் போக்கு கோர்ட்டு வரை சென்றுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்காளம், கேரளா ஆகிய இரு மாநில அரசுகளும், தங்கள் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள், எந்தவொரு காரணத்தையும் தெரிவிக்காமல் அந்தந்த கவர்னர்கள் ஓராண்டுக்கும் மேலாக கிடப்பில் போட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்திருந்தன.
இந்த வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரளா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், "மசோதாக்களை ஜனாதிபதி பரிசீலனைக்கு அனுப்பும் கவர்னரின் முடிவில் நாங்கள் சவால்களை எதிர்கொள்கிறோம்" என்றார்.
இதேபோல், மேற்கு வங்காளம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, ஜெய்தீப் குப்தா ஆகியோர், "ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் பட்டியலிடப்படும்போது, கவர்னர் மாளிகை ஜனாதிபதிக்கு மசோதாக்களை அனுப்புகிறது" என்றனர்.
இதைத் தொடர்ந்து இரு மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்டறிந்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இரு மாநில கவர்னர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.