எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|ஐகோர்ட்டுகள், சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கி, தேவைக்கேற்ப வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து தீர்ப்பது தொடர்பான விசாரணை நீதிமன்றங்களுக்கு ஒரே மாதிரியான வழிகாட்டுதலை உருவாக்குவது கடினம் என்றும் இந்த விவகாரத்தை ஐகோர்ட்டுகளிடமே விட்டுவிடுகிறோம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.
எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை திறம்பட கண்காணித்து தீர்ப்பதற்கு தானாக முன்வந்து வழக்கை பதிவு செய்யுமாறு ஐகோர்ட்டுகளை, சுப்ரீம்கோர்ட்டு வலியுறுத்தியுள்ளது.
மேலும் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டிருக்கும் வழக்குகளை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும் சிறப்பு நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளின் நிலவரத்தை அறிய ஐகோர்ட்டு இணையதளத்தில் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகள் தண்டனை பெற்றால் தற்போது தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை உள்ள நிலையில், அதை ஆயுள் காலம் முழுவதும் நீட்டிக்க கோரியும், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க போதிய நீதிமன்றங்களை ஏற்படுத்தவும் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.