கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் விடுதலை - பில்கிஸ் பானுவின் சீராய்வு மனு தள்ளுபடி
|கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரையும் கடந்த ஆகஸ்ட் மாதம் குஜராத் அரசு விடுதலை செய்தது.
புதுடெல்லி,
குஜராத் கலவரத்தின் போது கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண் 11 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அவரது குழந்தை உள்பட குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 11 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த குற்றவாளிகள் 11 பேரையும் தண்டனை காலம் முடியும் முன்னே கருணை அடிப்படையில் குஜராத் அரசு கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று விடுதலை செய்தது.
1992-ம் ஆண்டு குஜராத் அரசு கொண்டு வந்த சட்டத்தின் படி 14 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்த தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசுக்கு உத்தரவிடும்படி குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, குற்றவாளிகளின் மனு குறித்து 2 மாதங்களுக்குள் பரீசிலிக்கும்படி குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, மத்திய அரசின் ஒப்புதலுடன் பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரும் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி குஜராத் அரசு விடுதலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து, குற்றவாளிகள் 11 பேரும் ஆயுள் தண்டனை முடியும் முன் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பில்கிஸ் பானு சுப்ரீம் கோர்ட்டில் மனு சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
அதில், 1992-ம் ஆண்டு குஜராத் அரசு கொண்டு வந்த சட்டத்தின் படி 14 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்த குற்றவாளிகளை நல்லெண்ண அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அரசு முடிவெடுக்கலாம் என்று வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பில்கிஸ் பானு சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
மேலும், குற்றவாளிகள் 11 பேரும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்து தனது சீராய்வு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 11 குற்றவாளிகள் விடுதலை செய்வது குறித்து குஜராத் மாநில அரசு முடிவெடுக்கலாம் என்று பிறப்பித்த உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
முன்னதாக, பில்கிஸ் பானு தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பெலா திரிவேதி ஆகியோர் அடக்கிய அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி பெலா திரிவேதி விலகிவிட்டார். இதையடுத்து, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, விக்ரம் நாத் ஆகியோர் அடங்கி அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பில்கிஸ் பானுவின் சீராய்வு மனுவை விசாரித்த சுப்ரீம் கோட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு நகல் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க... 'அவர்கள் பிராமணர்கள் நல்ல மதிப்பு கொண்டவர்கள்' - பில்கிஸ் பானு பாலியல் குற்றவாளிகள் குறித்து பாஜக எம்.எல்.ஏ. கருத்து