< Back
தேசிய செய்திகள்
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனுக்கள் - 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனுக்கள் - 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
18 April 2023 5:46 PM IST

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனுக்களுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையின் போது தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுவை குறிப்பிட்டு, முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்கான பொருட்களை எடுத்துச் செல்ல வல்லக்கடவு-முல்லைப் பெரியாறு காட்டுச் சாலையை பயன்படுத்த அனுமதிக்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பு வாதத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஏற்கனவே அணை பாதுகாப்பு தொடர்பாக ரிட் மனு தாக்கல் செய்த மனுதாரர்கள், தங்கள் மனுக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக எந்த ஒரு இறுதி உத்தரவையும் தற்போது பிறப்பிக்கப் போவது இல்லை என தெரிவித்தனர்.

மத்திய அரசு தரப்பு வாதத்தின் போது, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் முறையிடலாம் என்ற வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.


மேலும் செய்திகள்