< Back
தேசிய செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

தினத்தந்தி
|
14 Aug 2024 12:48 PM IST

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.

டெல்லி,

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதேவேளை, டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி கீழமை நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து வந்தார். இதில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 12ம் தேதி ஜாமீன் வழங்கியது. ஆனாலும், சிபிஐ பதிவு செய்த வழக்கில் அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதையடுத்து, சிபிஐ வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். மருத்துவ காரணங்களை கருத்தில் கொண்டு தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. அதேவேளை, கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்கும்படி சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பிய சுப்ரீம் கோர்ட்டு வழக்கை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

மேலும் செய்திகள்