3 வருடங்களாக என்ன செய்தீர்கள்? தமிழக கவர்னருக்கு சுப்ரீம்கோர்ட்டு சரமாரி கேள்வி
|மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
புதுடெல்லி,
சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 10-ந்தேதி விசாரித்தது.
அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
வாதத்தை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரம் மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருப்பதாக தெரிவித்ததுடன், ரிட் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 20-ந்தேதிக்கு (அதாவது இன்று) தள்ளி வைத்தது.
இந்தநிலையில்,சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் வில்சன் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, எந்த காரணமுமின்றி மசோதாக்களை கவர்னர் நிராகரித்துள்ளார். ஒவ்வொரு முறையும் கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வந்துகொண்டிருக்க முடியாது. மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காததால் ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2020ம் ஆண்டு முதல் 13க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு தமிழ்நாடு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கால தாமதம் செய்கிறார் என்று தமிழக அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட்டு நவ.10ஆம் தேதி கவர்னர் தரப்பு பதிலளிக்க பிறப்பித்த பிறகு மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? மசோதாக்களை கவர்னர் திருப்பி அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் எங்கு உள்ளன? 3 ஆண்டுகளாக கவர்னர் என்ன செய்து கொண்டிருந்தார்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மேலும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கவர்னர் எப்போது ஒப்புதல் அளிப்பார் என்றும், கவர்னர் அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய காத்திருப்பதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மசோதாக்களுக்கு மறைமுகமாக ஒப்புதல் பெற இது போன்ற ரிட் மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க கூடாது என மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மசோதாக்கள் மீது பரிசீலனைகள் செய்ய வேண்டியுள்ளதால் அவகாசம் தேவை என்று கவர்னர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.