துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு - தெலுங்கானா ராஷ்டிர சமிதி
|துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு அளிப்பதாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி அறிவித்துள்ளது.
ஐதராபாத்,
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது.
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர் துணை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவிற்கு ஆதரவு அளிப்பதாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவர், முதல்-மந்திரி கே. சந்திரசேகர் ராவ், இந்திய துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் திருமதி மார்கரெட் ஆல்வாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் 16 எம்.பி.க்களும் அவருக்கு வாக்களிக்க அறிவுறுத்தப்படுகின்றனர்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.