சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவா..? எதிர்ப்பா..? ஆர்.எஸ்.எஸ் தெளிவுபடுத்த வேண்டும் - கார்கே தாக்கு
|சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவா அல்லது எதிரான நிலைபாட்டில் உள்ளதா என்பதை ஆர்.எஸ்.எஸ் தெளிவுபடுத்த வேண்டும் என்று கார்கே தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் கருத்து தெரிவித்துள்ளது. பொதுநல திட்டங்களுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு பயனுள்ளதாக இருக்கும் ஆனால், தேர்தல் ஆதாயங்களுக்காக அதை பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த மூன்று நாள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமை செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர், "சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான பிரச்சினை. அது நமது தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு முக்கியமானது. இது மிகவும் தீவிரமாக கவனமாக வேண்டும். சில சமயங்களில், அரசாங்கத்திற்கு தரவுகள் தேவைப்படுகின்றன. கடந்த காலங்களில் இதேபோன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், சாதிக் கணக்கெடுப்பு சமூகங்கள் மற்றும் சாதிகளின் நலனைப் பற்றி பேசுவதாக மட்டுமே இருக்க வேண்டும். அதை அரசியல் கருவியாகவோ, தேர்தல் பிரச்சாரத்துக்காகவோ பயன்படுத்தக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைதளத்தில், "சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவா அல்லது எதிரான நிலைபாட்டில் உள்ளதா என்பதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக மனுஸ்மிருதிக்கு ஆதரவாகச் செயல்படும் சங்பரிவார், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழை சமூகத்தின் பங்கேற்பைப் பற்றி கவலைப்படுகிறதா இல்லையா..?" என்று அதில் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.