< Back
தேசிய செய்திகள்
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாட்டுக்கு ஆதரவும்... எதிர்ப்பும்...!!
தேசிய செய்திகள்

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாட்டுக்கு ஆதரவும்... எதிர்ப்பும்...!!

தினத்தந்தி
|
14 Oct 2022 3:18 AM IST

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தும் மக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் 5 நாட்கள் தீபாவளி

நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. கர்நாடகத்தில் வருகிற 23-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை 5 நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகையை என்றாலே, நமது அனைவரின் நினைவுக்கு வருவது பட்டாசு வெடிப்பது தான். தீபாவளிக்கு புதுத்துணி அணிந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையும், குடும்பத்தினருடன் சேர்ந்து பட்டாசு வெடித்து மகிழ்வதும் உண்டு. ஆனால் பட்டாசு வெடிப்பதால் அதிகளவில் கரும்புகை ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது, காற்று மாசு ஏற்பட்டு வருவதாலும், கடந்த சில ஆண்டுக்கு முன்பே பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுப்பாடுகள் அமல்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தீபாவளி பண்டிகைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

2 மணிநேரம் மட்டும் அனுமதி

ஆனாலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்பதால், அந்தந்த மாநில அரசுகள் தீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க மக்களுக்கு அனுமதி வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுப்பாடு விதித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுபோல், பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் பட்டாசுகள் வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.

அதாவது இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உத்தரவிட்டது. அதன்படி கர்நாடகத்தில் 2 மணி நேரம் மட்டுமே தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பட்டாசு விற்பனை பாதிக்கப்பட்டு இருப்பதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். இந்த நிலையில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க விதிக்கப்படும் நேர கட்டுப்பாட்டுக்கு மக்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் காலம் நிர்ணயம் செய்வது தேவையற்றது என்று சிறுவர்களும், இளைஞர்களும் கூறி வருகிறார்கள். அதே வேளையில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதித்திருப்பதை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்று உள்ளனர். 2 மணிநேரமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்படுவதால், சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், காற்று மாசுபடுவதை தவிர்க்க முடியும் என்று கூறி வருகின்றனர்.

டெல்லியை போன்ற நிலைமை

பெங்களூருவில் ஏற்கனவே வாகனங்கள் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. பட்டாசுகள் வெடித்தும் சுற்றுச்சூழலை மாசு படுத்தினால், டெல்லியை போன்ற நிலைமை பெங்களூருவுக்கு வரும் நாட்கள் வெகு தொலையில் இல்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். தீபாவளி கொண்டாட்டத்திற்கு பின்பு பெங்களூருவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதற்கான உதாரணங்கள் உள்ளது.

பெங்களூருவில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், அந்த விதிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கும் சத்தம் குறைந்தாலும், 5 நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை பெங்களூரு நகரவாசிகள் உற்சாகமாக பட்டாசுகளை வெடித்து கொண்டாடி மகிழ்வது வாடிக்கை ஆகும்.

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருப்பது குறித்து மக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

கூடுதல் நேரம் வழங்க வேண்டும்

பெங்களூரு பனசங்கரியில் வசிக்கும் தனியார் நிறுவன ஊழியரான சூர்யா கூறுகையில்:- "தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு வெடிப்பது தான். அதற்கும் நேர கட்டுப்பாடு விதிப்பது சரியானது இல்லை. மக்கள் மகிழ்ச்சியாக இருக்க பட்டாசு வெடிக்கிறார்கள். அந்த பட்டாசுகளையும், இந்த நேரத்தில் தான் வெடிக்க வேண்டும் என்று சொல்வது சரியல்ல. பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு விற்பனையாகும் பட்டாசுகள் மூலமாக லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறருக்கு தொந்தரவு ஏற்படாது வண்ணம் பட்டாசு வெடிக்க வேண்டும். அதில், அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.

இதுபற்றி பிரகாஷ்நகரில் வசிக்கும் சரவணா கூறுகையில், "அரசோ, சுப்ரீம் கோர்ட்டோ எந்த உத்தரவு பிறப்பித்தாலும், அதனை ஒவ்வொருவரும் பின்பற்றி நடந்து கொள்வது கடமையாகும். தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பதிலும் அரசு உத்தரவை ஒவ்வொருவரும் மதித்து நடக்க வேண்டும். 2 மணி நேரம் என்பது போதாது தான்.

2 மணிநேரத்திற்குள் பட்டாசு வெடித்து முடிக்க வேண்டும் என்பதால், திருப்தி ஏற்படாது. எனவே கூடுதல் நேரத்தை ஒதுக்குவது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இரவில் கூடுதல் நேரம் ஒதுக்காமல், பகலில் பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்கலாம்" என்றார்.

நேரகட்டுப்பாடு சரி தான்

இதுபற்றி ராஜாஜிநகரில் வசித்து வரும் சாந்திராம் கூறுகையில், "பட்டாசு வெடிக்க காலம் நேரம் நிர்ணயித்து இருப்பது சரி தான். நேரம், காலம் இல்லாமல் பட்டாசு வெடித்தால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும். சாலையில் பொதுமக்கள் செல்லும் போது திடீரென்று பட்டாசு வெடிப்பதால், அதிர்ச்சி அடைவார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பட்டாசுகளை வெடித்து முடிக்க வேண்டும் என்று கூறுவதால், குழந்தைகளும் அதன்படி நடந்து கொள்வார்கள். குழந்தைகளையும் கண்காணிக்க முடியும். சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதும் தடுக்கப்படும். பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதித்தது சரிதான்" என்றார்.

இதுபற்றி மாரத்தஹள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவர் சதீஸ்குமார் கூறும் போது, "தீபாவளிக்கு 2 மணிநேரம் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சொல்வது ஏற்புடையது இல்லை. சில பட்டாசுகளை காலையில் தான் வெடிக்க முடியும். சில பட்டாசுகளை இரவில் வெடித்தால் தான் பார்க்க நன்றாக இருக்கும். பட்டாசு வெடிக்கும் இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கும். தீபாவளியை உற்சாகமாக கொண்டாடும் போது, இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது நமது மகிழ்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்" என்றார்.

பட்டாசு விற்பனை கடுமையாக பாதிக்கும்

இதுபற்றி பட்டாசு விற்பனை செய்யும் வியாபாரியான சின்னசாமி கூறியதாவது:-

தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனைகள் தற்போது நடந்து வருகிறது. கொரோனாவுக்கு பின்பு விநாயகர் சதுர்த்திக்கும் பட்டாசுகள் நல்ல முறையில் விற்பனையானது. சிவகாசியில் இருந்து தான் பட்டாசுகள் பெங்களூருவுக்கு வரும். இந்த ஆண்டு பட்டாசு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாகவும், சில காரணங்களுக்காகவும் பட்டாசு விலையும் உயர்ந்து விட்டது. கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பட்டாசுகள் விலை அதிகமாகவே உள்ளது. அதே நேரத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்படுவதால், வியாபாரத்தில் பாதிப்பு ஏற்படும். கிராமப்புறங்களில் நேர கட்டுப்பாட்டை முழுமையாக பின்பற்ற வாய்ப்பில்லை. பெங்களூரு போன்ற நகரங்களில் நேர கட்டுப்பாடு அமலில் இருக்க தான் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்