< Back
தேசிய செய்திகள்
பல்பொருள் அங்காடி ஊழியர் உயிரோடு எரித்துக்கொலை; உரிமையாளர் கைது
தேசிய செய்திகள்

பல்பொருள் அங்காடி ஊழியர் உயிரோடு எரித்துக்கொலை; உரிமையாளர் கைது

தினத்தந்தி
|
10 July 2023 12:15 AM IST

மங்களூரு டவுனில் வாய்த்தகராறில் பல்பொருள் அங்காடி ஊழியரை உயிரோடு எரித்துக்கொலை செய்த உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் முலிஹித்லு பகுதியில் வசித்து வந்தவர் தவுசிப் உஸ்மான். இவர் அப்பகுதியில் சொந்தமாக ஒரு பல்பொருள் அங்காடியை நடத்தி வருகிறார். அங்கு வட மாநிலத்தை சேர்ந்த கஜ்னான் ஜக்கு என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது அங்காடியில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகவும், அதில் சிக்கி ஊழியர் கஜ்னான் ஜக்கு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் பாண்டேஸ்வர் போலீசாருக்கு தவுசிப் உஸ்மான் தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து கஜ்னான் ஜக்குவை மீட்டு சிகிச்சைக்காக மங்களூருவில் உள்ள வென்லாக் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு கஜ்னான் ஜக்குவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர். அப்போது அங்கு மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டதற்காக அறிகுறி தெரியவில்லை. மேலும் அங்கு பெட்ரோல் நெடி வீசியது. இதனால் அங்காடி உரிமையாளரான தவுசிப் உஸ்மானை பிடித்து போலீசார் விசாரித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடியில் அவர், ஊழியர் கஜ்னான் ஜக்குவை பெட்ரோல் ஊற்றியும், மின்சாரம் பாய்ச்சியும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

மேலும் சாதாரண வாய்த்தகராறு ஏற்பட்டதால் கஜ்னான் ஜக்குவை, தவுசிப் உஸ்மான் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தவுசிப் உஸ்மானை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்