சிக்கமகளூருவில் குற்றச்செயல்களை தடுக்க ரோந்து பணிகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு, சூப்பிரண்டு உத்தரவு
|குற்றச்செயல்களை தடுக்க போலீசார் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.
சிக்கமகளூரு-
குற்றச்செயல்களை தடுக்க போலீசார் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.
ரோந்து பணிகள் மேற்கொள்ளவேண்டும்
சிக்கமகளூரு மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த், நேற்று தொலைபேசி வாயிலாக பொதுமக்களின் குறைகளை கேட்டு, தீர்வு கூறினார். சுமார் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு அவர் தீர்வு குறினார்.
இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட போலீ்ஸ் சூப்பிரண்டு உமாபிரசாந்த் கூறியதாவது:-
மாவட்டத்தில் அதிகப்படியான திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் வருகிறது. குறிப்பாக கிராம புறங்களில் உள்ள வீடுகள், தோட்டங்கள், பண்ணை வீடுகளில் இந்த திருட்டு சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. இதை தடுக்க போலீசார் முன்வரவேண்டும். மேலும் கிராம புறங்களில் உள்ள மக்கள் வெளியூர்களுக்கு செல்லும்போது அருகே உள்ள போலீஸ் நிலையத்தில் தகவல் அளிக்கவேண்டும்.
இல்லையென்றால் வீடுகளில் யாராவது ஒருவரை பாதுகாப்பிற்கு விட்டு செல்லவேண்டும். அப்போதுதான் திருட்டு நடைபெறுவது குறையும். போலீசாரும் இரவு நேரங்களில் ரோந்து பணிகள் மேற்கொள்ளவேண்டும். 112 வாகனத்தை இந்த ரோந்து பணிகளுக்கு பயன்படுத்தலாம்.
கேமராக்களை பழுது பார்க்கவேண்டும்
இதேபோல சிக்கமகளூரு நகரப்பகுதியில் போக்குவரத்து விதிமுறை மீறல்கள் அதிகரித்து காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்காணிக்க போலீசார் தவறி விடுகின்றனர். இனி போலீசார் கவனமாக செயல்படவேண்டும். எந்த இடங்களில் போக்குவரத்து சிக்னல் கேமராக்கள் பழுதடைந்திருக்கிறதோ, அதனை உடனே சரி செய்யவேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை யார் மீறினாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சாலையோரங்களில் உள்ள நடைபாதையில் வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் அந்த கடைகளை உடனே அப்புறப்படுத்தவேண்டும். விதிமுறையை மீறி நடைபாதையில் கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
அலட்சியமாக இருக்க கூடாது
அடையாளம் தெரியாத நபர்களிடம் ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு நம்பரை கூற கூடாது. தேவையில்லாத இணைய தளங்களுக்குள் செல்லவேண்டாம். இதில் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும். இதேபோல திருட்டு, வழிப்பறி, கொள்ளையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். பணியில் போலீசார் அலட்சியமாக செயல்பட கூடாது. யாரேனும் பணியில் அலட்சியமாக செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.