< Back
தேசிய செய்திகள்
நில முறைகேடு வழக்கில் ஜூன் 17-ந் தேதி நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு சம்மன்
தேசிய செய்திகள்

நில முறைகேடு வழக்கில் ஜூன் 17-ந் தேதி நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு சம்மன்

தினத்தந்தி
|
27 May 2022 3:13 AM IST

நில முறைகேடு வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகக்கூறி எடியூரப்பாவுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

பெங்களூரு

பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் வாசுதேவரெட்டி என்பவர் ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில் எடியூரப்பா கடந்த 2006-ம் ஆண்டு துணை முதல்-மந்திரியாக இருந்தபோது எலக்ட்ரானிக் சிட்டி, ஒயிட்பீல்டு உள்ளிட்ட பகுதிகளில் அரசு நிலம் அரசாணையில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் எடியூரப்பாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. இந்த மனு மீது அந்த சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் 25-ந் தேதி (நேற்று முன்தினம்) நேரில் ஆஜராக வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் சிறப்பு கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் ஆஜரான வக்கீல், அவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும், ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் ஆலோசனை கூறி இருப்பதால் அவரால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருகிற ஜூன் மாதம் 17-ந் தேதி எடியூரப்பா நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். 79 வயதாகும் எடியூரப்பா நுரையீரல் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்