கோடை வெப்பம்; குடிநீர் தேவையை தீர்க்க 5 வழிகள்... பெங்களூரு நிர்வாகம் ஐடியா
|நீர் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பெங்களூரு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தலைவர் கலந்து கொண்டு பேசினார்.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் 2 ஆண்டுகளுக்கு முன் தொடர் கனமழை பெய்தபோது பல்வேறு இடங்களில் நீர் தேங்கி, வெளியேற முடியாமல் சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால், பலர் வேலைக்கு செல்ல முடியாமல் திணறினர். ஐ.டி. பணியாளர்கள், மாணவர்கள் உள்பட பலரும் வாகன போக்குவரத்து இல்லாமல் தவித்த செய்திகளும் வெளிவந்தன.
ஆனால், இது கோடை காலம். பெங்களூருவின் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பரிதவித்து வருகின்றனர். காலி குடங்களுடன் தண்ணீர் தேடி அலைகின்றனர். இதுபோன்ற செய்திகள் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. குடிநீருக்காக போர்வெல் கிணறுகள், தண்ணீர் லாரிகள் மற்றும் காவேரி நீர் ஆகியவற்றை நகரவாசி மக்கள் பெருமளவில் சார்ந்திருக்கின்றனர்.
இந்த சூழலில், பெங்களூரு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியம், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, நீர் சேமிப்பு பற்றிய புது ஐடியாக்களை வெளியிட்டு உள்ளது. இந்த விசயங்கள் பெங்களூருவுடன் மற்ற பகுதி மக்களும் கடைப்பிடிக்க கூடிய வகையில் பயன் தரக்கூடியது.
நீர் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், பெங்களூரு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தலைவர் ராம் பிரசாத் மனோகர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, இந்த 5 சூத்திரங்களை நீங்கள் கடைப்பிடிக்கும்போது, 30 சதவீத அளவுக்கு நீர் தேவையானது பூர்த்தி செய்யப்படும் என்றார்.
இதன்படி, 'நீரை சேமித்தல், சுத்திகரிக்கப்பட்ட நீர் பயன்பாடு, போர்வெல் நீரை பயன்படுத்தும்போது தொழில்நுட்பங்களையும் கடைப்பிடிப்பது, மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது மற்றும் இந்த நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வது' ஆகியவை பயனளிக்கும் என்று கூறினார்.
நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 50 லிட்டர் நீர் தேவையாக உள்ளது. 20 சதவீத சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தும்போது, 30 சதவீத காவேரி நீர் பாதுகாக்கப்படுகிறது. இந்த சேமிக்கப்பட்ட நீரானது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருப்பி விடப்படும் என்றும் அவர் கூறினார்.