தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்த்து சுமலதா எம்.பி. நாளை போராட்டம்
|தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க எதிர்த்து சுமலதா எம்.பி. தலைமையில் நாளை மண்டியாவில் போராட்டம் நடைபெறுகிறது.
மண்டியா:-
தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக விவசாயிகள், அரசியல் தலைவர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாயிகள் மற்றும் கன்னட அமைப்பினர் தண்ணீர் திறப்பை நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மண்டியா தொகுதி எம்.பி. சுமலதா அம்பரீஷ் மண்டியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதால் விவசாயிகள் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுவார்கள். இந்த விஷயத்தில் கட்சி பாகுபாடின்றி நாம் அனைவரும் கர்நாடக விவசாயிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு துணையாக நின்று போராட வேண்டும்.இது விவசாயிகள் பிரச்சினை இல்லை. இது சாதாரண பொதுமக்கள் பிரச்சினை. இந்த விஷயத்தில் யாரும் அரசியல் விளையாட்டை விளையாட கூடாது. இந்த விஷயத்தில் மத்திய அரசு, தமிழகத்துக்கு ஆதரவாக உள்ளது. அதனால் இதற்கு தீர்வு காண நாம் உழைக்க வேண்டும். நம் பிரச்சினைக்காக நாம் போராட வேண்டும். மாநில அரசு இதுதொடர்பாக அனைத்துக்கட்சி அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் பா.ஜனதா எம்.பி அல்ல. பா.ஜனதாவின் முடிவில் எனக்கு தொடர்பு இல்லை. விவசாயிகளுக்கான நான் நிற்பேன். எப்போது வேண்டுமென்றாலும் விவசாயிகள் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 21-ந் தேதி(நாளை) மண்டியாவில் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.